Tuesday, January 3, 2012

ஔவையார்


இவர் தமிழறிவுடன் பிறந்தவர்.இவர் பிள்ளையாரிடமும் மற்றும் முருகனிடமும் மிகுந்த அன்பு வைத்திருந்தார், மேலும் அவர்களிடம் பேசும் பெரும் பேறு உடையவராகயிருந்தார். இவர் காட்டு வழி செல்லும் போது இளைப்பாறும் பொருட்டு ஒரு நாவல் மரம் கீழ் அமர்ந்தார். அம்மரத்தே ஒரு சிறுவன் இருப்பதைக் கண்டு, உண்ண கனிகள் சில கேட்டார். அதற்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வினாவினான். இவ்வினாவினால் குழப்பம் அடைந்த இவர் பழமும் சுடுமா? என்று எண்ணி, சுட்ட பழம் தருமாறு வேண்டினார். அச்சிறுவனும் நாவல் மரக் கிளையை உலுக்க சில பழங்கள் உதிர்ந்து தரையில் விழுந்தன, இவற்றை பொறுக்கி அவற்றில் உள்ள மண் போகும் வண்ணம் ஊதினார் ஔவையார். இதைப் பார்த்த சிறுவன் இவரிடம் பழம் சுடுகிறதா நன்கு ஊதி உண் எனக் கூறி நகைத்தான். குறும்பு தனமான மதி நுட்பத்தை கண்ட இவர் உன்னிடம் நான் தோற்றேன் என வருந்திமனார்.இதன்பின் சிறுவனும் முருகனாய் இவர்முன் தோன்றி கொடியது எது?, இனியது எது?, பெரியது எது?, அரியது எது? என இவரை சோதிக்கும் பொருட்டு வினாவி, செய்யுள்களில் விடையும் பெற்று மகிழ்ந்தான் என்பர். சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் முறையே கரியிலும் பரியிலுமெறி கயிலைக்கு செல்வதை அறிந்த இவர் தாமும் அவர்களுடன் அங்கு செல்ல விரும்பி தாம் பிள்ளையாருக்கு வழக்கமாக செய்யும் பூசையை அவசரமாக செய்ய, இவர் எண்ணம் அறிந்த பிள்ளையார், அவசரம் வேண்டாம் நான் உன்னை கயிலைக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறினார். இதனால் மகிழ்ந்த இவர், பிள்ளையார் மீது விநாயகர் அகவல் பாடினார். பிள்ளையாரும் கூறியவாறு இவரை தும்பிக்கையால் தூக்கி கயிலையில் வைத்தார் என்பர். அங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ, பின்வரும் செய்யுளில் பிள்ளையாரின் அருளால் இங்கு வந்தேன் என்று விடையளித்தார்.ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது போன்ற நூல்களை சிறுவர்களுக்கு இயற்றி, தமிழ்ச் சிறுவர்கள் நெஞ்சில் ஔவைப் பாட்டியாக நிலைத்து இருப்பவர். அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் போன்ற நூல்களை இயற்றியவரும் இவரே !!!


No comments:

Post a Comment