Thursday, January 5, 2012

கோளறு திருப்பதிகம்கூண்பாண்டிய மன்னனை சமணத்திலிருந்து விடுபட செய்ய அவருடைய மனைவி மங்கயர்கரசியார் மந்திரியான குலச்சிறை நாயனாரை திருஞானசம்பந்தரை  அழைத்து வர சொன்னார் . அந்த செய்தி திருஞானசம்பந்தரிடம் வந்த உடன் அவர் மதுரைக்கு புறப்பட ஆயத்தமானார் .அப்போது திருநாவுக்கரசர்  “ பாண்டியன் சமணனாய் மாறிவிட்டான். மதுரையில் சமணர் ஆதிக்கம் அளவில்லாமல் போய்விட்டது என்று கேள்விப்பட்டேன். என் இளம்வயதில் சமணரால் அடியேன் அடைந்த துன்பங்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்திருக்கும். சிறு பிள்ளையான தாங்கள் மதுரைக்குச் சென்றால் அந்த சமணர்களால் ஏதாவது ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன். அதனால் தாங்கள் மதுரைக்குச் செல்லவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்

'அப்பரே. என் தந்தையாரைப் போன்ற அன்பு என் மேல் தங்களுக்கு இருப்பதால் தான் அடியேன் உங்களை அப்பர் என்று அழைத்தேன். உங்களுக்கு சமணர்களால் விளைந்த துன்பங்களெல்லாம் எந்த இறைவனின் திருவருளால் விலகியதோ அதே இறைவன் திருவருள் அடியேனையும் காக்கும் என்பதனை மறந்து கலங்குகிறீர்களே. தாங்கள் இப்போது கலங்குவதைப் பார்க்கும் போது நான் உங்களை அப்பர் என்று அழைத்தது மிகச் சரி என்று தெளிவாகிவிட்டது. என்னை தயைசெய்து தடுக்கவேண்டாம்.'

'அது மட்டும் இல்லை ஐயனே. இன்று நாளும் கோளும் சரியில்லை. அதனால் இன்று நீங்கள் கிளம்பி மதுரைக்குச் செல்லாமல் பிறிதொரு நாள் சென்றால் மிக்க நலமாகும் என்று அடியேன் எண்ணுகிறேன்'.

'அப்பரே. நாளும் கோளும் அடியார்க்கு என்றும் மிக நல்லவை என்று தாங்கள் அறியாததாஎன்று கூறி இக்கோளறு பதிகத்தை பாடினார் இதை படிப்பதால் கிரகங்களால் விளையும் அனைத்து தீயவைகளும் விலகி னன்மைகள் ஏற்படும்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 01


வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்
 விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்
 மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து - களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல்
அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன்
களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).
என் உளமே புகுந்த அதனால் - அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்)
ஆசறு நல்ல நல்ல - ஒரு குற்றமும் இல்லாதவை
அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 02


என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க
எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்
ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்
ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்
பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்
ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்
உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 03


உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து - அழகில் சிறந்த சிவந்த மேனியின் மேல் ஒளிவீசும் திருநீற்றினை அணிந்து கொண்டு
உமையொடும் வெள்ளை விடை மேல் - உமையன்னையுடன் வெள்ளை எருதின் மேல் ஏறி
முருகலர் கொன்றை - தேன் நிறைந்து மலர்ந்த அழகிய கொன்றைப் பூவினையும்
திங்கள் - நிலவையும்
முடிமேல் அணிந்து - திருமுடியின் மேல் சூடி
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதால்
திருமகள் - செல்வத்திற்கு அதிபதியான திருமகள்
கலையதூர்தி - கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்
செயமாது - வெற்றிக்கு அதிபதியான மலைமகள்
பூமி - நிலமகள்
திசை தெய்வமான பலவும் - எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அடியவர்களுக்கு மிக நல்லவை. மிக மிக நல்லவை. நன்மையை அன்றி மற்றவற்றைத் தாரா.

மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 04


மதிநுதல் மங்கையோடு - நிலாப் பிறையை போல் வளைந்து, நிலவைப் போல் குளிர்ந்த ஒளிவீசும் நெற்றியையுடைய அன்னை உமையோடு
வடபாலிருந்து - தென் திசை நோக்கி (தட்சினாமூர்த்தி திருவுருவத்தில்) வடப்பக்கமாய் அமர்ந்து
மறையோதும் எங்கள் பரமன் - மறைபொருளாய் இருக்கும் ஞான நூல்களை ஓதி அருளும் எங்கள் பரமனான சிவபெருமான்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்து - கங்கையும் கொன்றை மாலையும் தன் திருமுடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிரந்தரமாய் வீற்றிருப்பதால்
கொதியுறு காலன் - உடலை வருத்தும் காய்ச்சல் என்னும் காலனும்
அங்கி - உடலைச் சுடும் அக்கினியும் (தீயும்)
நமனோடு தூதர் - உயிரை எடுக்கும் நமனெனும் யமனும் அவனுடைத் தூதர்களாகிய
கொடுநோய்கள் ஆன பலவும் - கொடிய நோய்கள் யாவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அவை மிக நல்லவை. நற்குணங்கள் மிகுந்தவை. நற்குணங்கள் அளிப்பவை.

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 05


நஞ்சணி கண்டன் - தேவர்களும் அசுரர்களும் இழந்த செல்வங்களை மீண்டும் அடைவதற்காக பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சை இந்த உலகங்களின் மீதுள்ள கருணையினால் தான் விழுங்கி அது தொண்டையில் தங்கியதால் அதுவே தொண்டைக்கு ஒரு அணிகலனாக அழகுடன் அமையப் பெற்ற நீலகண்டனாகிய
எந்தை - என் தந்தை
மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் - அன்பும் அருளும் மிக்க அன்னை உமையவளோடு அறவுருவாகிய எருதின் மேல் ஏறி வரும் எங்கள் பரமனாகிய சிவபெருமான்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்து - அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நடு இரவு நேரத்தின் இருட்டினைப் போன்ற நிறம் கொண்ட வன்னி மலரையும் (சிவந்த) கொன்றை மலரையும் தனது திருமுடி மேல் அணிந்து கொண்டு
என் உளமே புகுந்த அதனால் - அவனது அளவில்லா அருளினாலே என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிலை பெற்றதனால்
வெஞ்சின அவுணரோடும் - வெப்பமும் கோபமும் மிகுந்த அவுணரும்
உருமிடியும் மின்னும் - உருமும் இடியும் மின்னலும்
மிகையான பூதமவையும் - மிக்க சக்தி வாய்ந்த ஐம்பூதங்களும் (நிலம், நீர், காற்று, தீ, விண்)
அஞ்சிடும் நல்ல நல்ல - இறைவனது பெருமையையும் அவனடியார்களது பெருமையும் எண்ணி அஞ்சிடும்
அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அதனால் அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 06


வாள்வரி அதளதாடை - வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடையும்
வரிகோவணத்தர் - வரிகளையுடைய புலித்தோலால் ஆன இடையாடையும் அணிந்த சிவபெருமான்
மடவாள் தனோடும் உடனாய் - அன்பு மனையாளோடு சேர்ந்து
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து - தாமரையும் வன்னிமலரும் கொன்றைமலரும் கங்கை நதியும் தன் திருமுடியின் மேல் சூடி
என் உளமே புகுந்த அதனால் - தானாக என் உள்ளம் புகுந்து அங்கே நிலைநின்றதால்
கோளரி உழுவையோடு - கொடுமையே வடிவான புலியும்
கொலையானை - பயங்கரமான யானையும்
கேழல் - காட்டுப் பன்றியும்
கொடுநாகமோடு - கொடிய நாகமும்
கரடி - கரடியும்
ஆளரி - ஆளைக் கொல்லும் சிங்கமும்
நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 07


செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக - அழகான கொங்கைகளைக் கொண்ட மங்கையான உமையன்னை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார் - விடையில் ஏறுகின்ற, நம்மையெல்லாம் தன் செல்வமாக உடைய செல்வனாம் சிவபெருமான் சேரும் இடம்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து - ஒப்பு கூறத்தக்க இளமதியமும் கங்கையும் (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - தானாகவே என் உள்ளம் புகுந்து அங்கு நிலை நின்றதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் - வெப்பமான காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம் (மனநிலை தொடர்பான நோய்கள்) போன்ற எந்த நோயும்
வினையான வந்து நலியா - வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை (அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய் இருக்கும்)

வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 08


வேள்பட விழி செய்து அன்று - அன்று மதனவேள் சாம்பலாக நெற்றிக்கண்ணைத் திறந்து
விடைமேல் இருந்து - அறவுருவான எருதின் மேல் அமர்ந்து
மடவாள் தனோடும் உடனாய் - அழகிய உமையன்னையுடன் சேர்ந்து
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து - ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடிமேல் சூடி
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்ற அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா - ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது 
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 09


பல பல வேடமாகும் பரன் - அடியார்கள் வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி அருள் புரியும் பரமன்
நாரி பாகன் - பெண்ணாகிய உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்டவன்
பசுவேறும் எங்கள் பரமன் - விடையின் மேல் ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து - நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் தன் திருமுடி மேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும் - மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும் தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது போன்ற பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை அடியார்களுக்கும் மிக மிக நல்லவை.

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 10


கொத்தலர் குழலியோடு - கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு
விசயற்கு நல்கு - விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக
குணமாய வேட விகிர்தன் - இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவன்
மத்தமும் - கங்கை என்னும் நீரையும்
மதியும் - பிறை நிலவினையும்
நாகம் - பாம்பினையும்
முடிமேலணிந்து - தன் திருமுடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே - பௌத்தரையும் சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. 11


தேனமர் பொழில் கொள் ஆலை - தேன் நிரம்பிய மலர்கள் நிரம்பிய சோலைகளும் கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு நோக்கினும் கரும்பாலைகளும்
விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ - செந்நெல் எங்கும் மிகுதியாக விளைந்து சிவந்த பொன்னைப் போல் திகழ இருக்கும்
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து - நான்முகனாகிய பிரம்மனை முதலாகக் கொண்டு எல்லாத் தேவர்களும் நிலையாகத் தங்கியிருக்கும் பிரமாபுரமாகிய சீர்காழியின்
மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர் 
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் - தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த
ஆன சொல் மாலை ஓதும் - சிறந்த இந்தச் சொல்மாலையை ஓதுகின்ற
அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே - அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி.

திருசிற்றம்பலம்

No comments:

Post a Comment